By Raguvaran Kathirvel
முன்னைய காலங்களில் குறிப்பிட்ட கல்வித்தகைமை ஒன்றை பெற வேண்டும் என்றாலும், அல்லது புதிதாக ஏதேனும் ஒன்றை கற்க வேண்டும் என்றாலும் கல்வி நிலையமொன்றில் இணைந்து உரிய கட்டணங்களை செலுத்தி தொடர்ந்து வகுப்புகளை பின்பற்றல் அவசியமாகும்.
ஆனால், தற்பொழுது இணையக் கல்வியுடன் இம்முறை பாரிய அளவில் மாற்றமடைந்துள்ளது.
தற்காலப்பகுதியில் உலகளாவிய ரீதியாக 6 பில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் இணையக் கல்வியை தொடருகின்றனர். 50% ஆன பல்கலைக்கழகங்கள் இணையக்கல்வி முறையிலான கற்கை நெறிகளை வழங்குகின்றன. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி அடிப்படையில் இணையக்கல்வி துறையும் தொடர்ந்து வளர்ச்சியடைகின்றது.
இணையக்கல்வி என்றால் என்ன?
இணையத்தின் மூலமாக முகாமைப்படுத்தல் மற்றும் வழங்கப்படுதல் என்பன மேற்கொள்ளப்படும் கல்வி முறை இணையக்கல்வி எனப்படும்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தின் வழியாக திருத்தமான அறிவுறுத்தல்களை வழங்க முடியுமா?, இதன் மூலம் கற்கை நெறியை பின்பற்ற முடியுமா? போன்ற கேள்விகள் எழுந்திருந்தன. ஆனால் தற்போதைய இலத்திரனியல் யுகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இவை சாத்தியமாகியுள்ளன.
கல்வி முறையைக் கருதும்போது ஆரம்பத்தில் பின்பற்றப்பட்டு இன்று வரை பயன்பாட்டில் காணப்படுவது பாரம்பரிய கல்வி முறைமை (Traditional Education) ஆகும். இதன்போது ஆசிரியர், மாணவர்கள் நேரடியாக குறித்த இடமொன்றில் கூடி தமது கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவர். பின்னர் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இப்பாரம்பரிய கல்வி முறைமைகளில் இலத்திரனியல் சாதனங்களை பயன்படுத்தி கற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இது Hybrid Education என அழைக்கப்படும். தொடர்ந்து தொழில்நுட்பமானது பாரிய வளர்ச்சியை காணும்போது முற்றிலும் இணையத்தை மையமாகக் கொண்ட இணையக்கல்வி முறை (Online Education) உருவாகியது.
இணையக்கல்வி முறை இரண்டு விதமாக அமையும்.
Synchronous Method
இம்முறையில் ஒரே காலப்பகுதியில் கல்வி வழங்குனர் மற்றும் பயனர் ஆகியோருக்கிடையில் இணையத் தொடர்பாடலின் மூலம் கற்றல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
Asynchronous Method
கல்வி வழங்குனர் மற்றும் பயனர்களுக்கிடையிலான தொடர்பாடல் ஒரே காலப்பகுதியில் அமைவு பெறாது முன்னதாக தயார் செய்யப்பட்டிருக்கும் கற்றல் பதிவுகளை பயனர் வேறொரு காலப்பகுதியில் பயன்படுத்தி கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுவது இம்முறையாகும். இதன்போது வழங்குனர், பயனர் என்போருக்கிடையில் நேரடித்தொடர்பு காணப்படாது.
வளர்ச்சி கால சவால்கள்
1960 ஆம் ஆண்டளவில் ஆரம்பித்த இணையக்கல்வியானது தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு பல்வேறு சவால்கள் நிறைந்ததாகக் காணப்பட்டது. கற்கையின் தரம் மற்றும் இத்துறையில் தகமை பெற்ற ஆசிரியர்களின் பற்றாக்குறை என்பன இதன் பிரதான காரணங்களாக அமைகின்றன.
சவால்களை வினைத்திறனாக முகங்கொடுத்தல்
இவ்வாறான சவால்களை தகர்த்தெறிந்து தற்காலப்பகுதியில் இணையக்கல்வி பாரிய வளர்ச்சியை கண்டுள்ளது.
இணையக்கல்வி முறையிலான கற்கைநெறிகளை தேர்ந்தெடுக்கின்ற ஆரம்ப நிலை மாணவர்களுக்கு அதிகளவான கற்றல் தளங்க ள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் முதன்மை நோக்கங்களாக மாணவர்களின் கற்றல் செலவுகளை குறைத்தல் மற்றும் போட்டித்தன்மை நிறைந்த சமூகத்தில் வினைத்திறனாக தகைமைகளை பெற்றுக்கொள்ளும் விதத்திலாக அவர்களை தயார்செய்தல் என்பன அமைகின்றன. இதனடிப்படையில் இன்றைய காலத்தில் இணையக் கல்வியானது மூன்றாம் நிலைக் கல்வியில் முக்கியப்பங்கு வகிக்கின்றது. எனவே, தற்போது உலகத்தரம் வாய்ந்த விரிவுரையாளர்கள் உள்ளிட்ட குழுவினரால் பல்வேறு கல்லூரிகளிலும், பல்கலைக்கழங்கங்களிலும் இணையக்கல்வி முறையிலான கற்கை நெறிகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
இணையக்கல்வித் துறையில், ஆசிரியர் தகைமைகள் தொடர்பான ஐயங்களை நீக்கும் விதமாக இக்கல்வி வழங்குனர்கள் பலர் பாவனையாளர் மதிப்பீடுகள் மற்றும் உள் மதிப்பீடுகளை ஏற்படுத்தியுள்ளனர். உதாரணமாக "Star Teacher" என்ற மதிப்பீட்டுத் தளமானது ஆசிரிய தகைமை மதிப்பீட்டு முறையாக இணைய கற்கை பிரபலமாக அமைகின்ற சீனா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது.
பாரம்பரிய கல்வி முறையில் காணப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யும் விதமாக இணையக்கல்வி முறை அமைகின்றது. இது இணைய கருத்து பரிமாற்ற தளம் மற்றும் காணொளி கலந்துரையாடல்கள் மூலம் வினைத்திறனாக மேற்கொள்ளப்படுகின்றது. இதனடிப்படையில் இன்றையக் காலப்பகுதியில் இணையக்கல்வி முறை மூலம் பாரிய வசதிகளற்ற பிரதேசங்களிலும் சிறந்த கல்வியை பெற்றுக்கொள்ளக் கூடியதாக அமைகின்றது. மேலும், கல்வியை பெற நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை அற்றுப்போய் மாணவர்களின் சௌகரியங்களுக்கு ஏற்ப கல்வியை பெற்றுக்கொள்ளக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மாணவர்கள் இணையக்கல்வியை எளிதாக கையாளவும், அணுகவும் முடியுமாக உள்ளது. அந்தவகையில் மாணவர்களிடம் கணினி, இணையத் தொடர்பு மற்றும் அடிப்படை தொழில்நுட்ப அறிவு என்பன காணப்படுதல் இணையக்கல்வியை பெற போதுமானதாக அமைகின்றன.
பாரம்பரிய கல்வி முறையிலிருந்து மாறும் போது இழக்கப்படுகின்ற வகுப்பறைச் சூழல் காரணிகளை ஈடுசெய்யும் விதமாக இணையக்கல்வியின் நெகிழ்வு தன்மை மற்றும் செலவு குறைப்பு ஆகியவை அமைகின்றன. மேலும், இதன் மூலம் கற்றல் பதிவுகளை மாணவர்கள் தேவையான பொழுது பெற்றுக்கொள்ளக்கூடிய வசதி காணப்படுகின்றது. பாடப்பரப்புகளுக்கு மேலதிகமான விடயங்களை தேடிக்கற்றலுடன் மாணவர்களின் சௌகரியத்திற்கேற்ப பாடங்களை மீட்டல் செய்யக்கூடிய வசதிகள் காணப்படுகின்றன. இவற்றைக்காட்டிலும், பாரம்பரிய கல்விமுறையில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் ஒன்றாக ஒரே இடத்தில் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதை விட இணையக்கல்வி முறையில் கற்றல் பதிவுகள் ஒவ்வொரு மாணவரையும் பூரணமாக சென்றடையக்கூடியதாக அமைதல் வினைத்திறனான அணுகுமுறையாக அமைகின்றது. இதன் மூலமாக தனி மாணவரின் ஆசிரியருடனான தொடர்பு திடமானதாக அமைவதோடு, தனி மாணவர் மீதான முழு கவனமும் செலுத்தப்படுகின்றது.
மேலும், உலகளாவிய ரீதியில் பல நாடுகள் அனைத்து பிரஜைகளுக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என கருதுகின்ற இந்த காலப்பகுதியில் இணையக்கல்வி மூலமாக இது சற்றே எளிதாக மேற்கொள்ளப்படக் கூடியதாக அமைகின்றது.
அனைவருக்கும் கல்வி
தொழில்நுட்பத்தின் பரந்த பரவல் மற்றும் அனைவருக்கும் கல்வி என்ற எண்ணக்கருவின் உலகளாவிய ரீதியான பரவலின் அடிப்படையில் கல்வித்தேவை பூர்த்திக்கு இணையக்கல்வி சிறந்த பங்களிப்பினை மேற்கொள்ளும். இருப்பினும் இந்த நடவடிக்கையில் இணையக்கல்வியின் பூரண பங்கு மற்றும் பாரம்பரிய கல்விமுறைக்கு மாற்றாக இது அமைதல் என்பன பற்றி உறுதியாக குறிப்பிடுதல் கடினம்.
எனவே, கல்வித்தேவை பூர்த்திக்கு இணையக்கல்வி எந்தெந்த வழிகளிலெல்லாம் பங்களிப்பு செய்யும் என ஆராய்ந்து அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் வசதி வாய்ப்புகள் குறைந்த மாணவர்களை இணையக்கல்வி முறை மூலம் சிறந்த கல்வி சென்றடையும் முயற்சிகளில் ஈடுபடுதல் சிறந்தது. இது நிச்சயமாக எளிதான பணியாக அமையாது. இணையக்கல்வி முறையானது விசேடமான பராமரிப்பு அவசியப்படுகின்ற துறையாகும். மேலும் இதற்கான அங்கீகாரம் கிடைப்பதும் சவாலாகவே அமைகின்றது. இவ்வாறு பல சவால்களைத் தாண்டி இணையக்கல்வி முறை வளர்ச்சிபெறுமெனின் நிச்சயமாக கல்வித்துறையில் பாரிய முன்னேற்றம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
உலக நாடுகள் மற்றும் இலங்கையில் இணையக்கல்வி
"Journal of Global Information Technology Management" என்ற ஆய்விதழின் படி இணையக்கல்வியுடனான மாணவர்களின் தொடர்பானது ஐக்கிய அமெரிக்காவில் கடந்த 14 ஆண்டுகளில் அதிகரித்தே வந்துள்ளது. அதேவேளை பாரம்பரிய கல்விமுறையில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியும் ஏற்பட்டது (Allen, Seaman, 2018).
2016 ஆம் ஆண்டு 6 மில்லினுக்கும் அதிகளவிலான மாணவர்கள் இணையக்கல்வி முறையில் குறைந்தது ஒரு பாடநெறியையேனும் தொடர்வோராக அமைந்துள்ளது(Lederman, 2018). மேலும் இந்த எண்ணிக்கை 30% இனால் அதிகரித்துள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் ஆசிய பசுபிக் வளைய நாடுகளில் 2000 தொடக்கம் 2011 ஆம் ஆண்டுகளில் இணையக்கல்வியானது பாரியளவு வளர்ச்சியைக் காட்டியுள்ளது. அவுஸ்திரேலியாவில் மூன்றாம் நிலை கற்கை வழங்குனராக திகழ்கின்ற பல்வேறு பல்கலைக்கழகங்களில் இணையக்கல்வி முறை ஆரம்பிக்கப்பட்டு, இம்முயற்சி வளர்ச்சியையும் கண்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு KPMG மற்றும் Google மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்தியாவில் அண்ணளவாக 1.6 மில்லியன் மாணவர்கள் இணையக்கல்வியில் இணைந்துள்ளதாகவும் 2021 ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை 9.6 மில்லியனாக வளர்ச்சி அடையுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு உலகத்தை கருதும் போது அதிகளவில் தொழில்நுட்ப வளர்ச்சி காணப்படவில்லை, ஆனால் மேற்குறிப்பிட்ட நாடுகளில் தொழில்நுட்ப வளர்ச்சி, அது சார்ந்த அணுகுமுறை என்பன குறிப்பிட்டளவு காணப்பட்டன. இதனால் இணையக்கல்வி தொடர்பான ஆரம்ப நிலை ஏற்பட்டிருந்தது. தற்போது உலகளாவிய ரீதியில் தொழில்நுட்பம் பாரிய வளர்ச்சி அடைந்துள்ளதால் தற்பொழுது அந்த நாடுகளில் இணையக்கல்வி பாரியளவு வளர்ச்சியடைந்துள்ளது.
எமது நாட்டை கருதும் போது அந்த காலப்பகுதியில் தொழில்நுட்ப ரீதியாகவும், அது சார்ந்த அணுமுறைகளிலும் சற்று பின்தங்கியே அமைந்திருந்தது. இருப்பினும் இப்பொழுது இணையத்தின் மூலமாக பல்வேறு வசதிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே, இணையக்கல்வி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிக வாய்ப்புகள் காணப்படுகின்ற போதிலும் பாரம்பரிய கல்விமுறையை கடந்து இணையக்கல்வி முறையை ஏற்றுக்கொள்வதிலுள்ள தயக்கம் காரணமாக அந்த துறையில் பின்தங்கி காணப்படுகின்றோம்.
இருப்பினும், இன்றைய காலப்பகுதியில் முழுமையாக இல்லாவிடினும் குறிப்பிட்டளவு இணையக்கல்வி எமது நாட்டிலும் பின்பற்றப்பட்டே வருகின்றது. சில பல்கலைக்கழகங்களில் இணையக்கல்வி முறையிலான கற்கைநெறிகள் காணப்படுகின்றன. எதிர்வரும் காலங்களில் இது மேலும் வளர்ச்சியடையும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
INTERNATIONAL
Translate Our Content